சர்ச்சுக்குள் செக்ஸ் விஷயங்களும் பாலியல் கொடுமைகளும்

Posted: ஒக்ரோபர் 10, 2011 in இந்தியா இயேசு, இயேசு, கருணாநிதி, காமவெறி, சிலுவை, செக்ஸ் வீடியோ, தோமையார், பரிசுத்த ஆவி

டாக்டர் பிரகாஷ்

மூலம்: ப்ரதீப் கிருஷ்ணன்
தமிழில்:  டாக்டர் பிரகாஷ்

முன்னாள் பாதிரியாரின் அதிர்ச்சியூட்டும் ஒப்புதல் வாக்குமூலங்கள் கிறித்தவத் திருச்சபையினருக்கு ஒரு பெரும் தலைவலியாக உருவெடுத்துள்ளன.
இரண்டாண்டுகளுக்கு முன்னால், பெண்கள் கல்லூரியில் பேராசிரியராகப் பணிபுரிந்து ஓய்வுபெற்ற ஜெஸ்மி என்னும் கன்னியாஸ்திரி, கத்தோலிக்க சர்ச்சை விட்டு வெளியேறி, “ஆமென்: ஒரு கன்னியாஸ்திரியின் சுயசரிதை” (Amen: Autobiography of a Nun) என்னும் புத்தகத்தை எழுதினார். பாதிரியார்கள் மற்றும் கன்னியாஸ்திரிகளின் முறைகேடான பாலுறவு, ஒழுக்கக்கேடான வாழ்க்கை முறைகளை ஆமென்வெளிச்சத்துக்குக் கொண்டு வந்தது.
சமீபத்தில், வின்சென்சியன் கத்தோலிக் சர்ச் குழுமத்தில் 24 வருடங்களாக அருட்தந்தையாகப் பணியாற்றிய பாதிரியார் கே.பி.ஷிபு, தனது பணியை ராஜினாமா செய்து விட்டு, “ஒரு பாதிரியாரின் இதயம்” (The Heart of a Priest-”Oru Vaidikante Hrudayamitha”) என்னும் புத்தகத்தை எழுதியுள்ளார். அதில் பாதிரியார்களிடம் நிலவும் முறையற்ற பாலியல் வேட்கையும் அதிகாரம் மற்றும் பணத்திற்கான பேராசையும் மலிந்துகிடப்பதைப் புட்டுப் புட்டு வைக்கிறார். பணத்திற்கும், அதிகாரத்திற்குமான பேராசை அவர்களை நெறிபிறழ்பவர்களாகவும் கயவர்களாகவும் மாற்றி விட்டதாகக் கூறுகிறார்.
மேலும், 60 சதவீத பாதிரியார்கள் முறையற்ற பாலுறவுத் தொடர்பு வைத்திருப்பதாகவும், தேவனின் தூதர்கள் என்று கூறிக் கொள்ளும் இவர்கள் அன்பையும் கருணையையும் பொழிவதற்குப் பதிலாக, ஏழைமை, பெண்கள் மற்றும் அனாதைக் குழந்தைகளின் ஆதரவற்ற நிலையைப் பயன்படுத்தி கொஞ்சமும் வெட்கமே இல்லாமல், அவர்களை முறைகேடாகத் துய்க்கின்றனர்.
பிரம்மச்சர்யத்தைக் கடைப்பிடிக்க வேண்டிய பாதிரியார்களும் கன்னியாஸ்திரிகளும் முறையற்ற காம வாழ்க்கை, நீலப்படங்கள் பார்த்தல், ஓரினச்சேர்க்கை உள்பட எல்லாத் தீய ஒழுக்கங்களிலும் ஈடுபடுகின்றனர் என்கிறார்.
திருச்சபை முன்னாள் உறுப்பினர்களின், பாதிரி வாழ்க்கையைக் குறித்த குற்ற ஒப்புதல்களே கத்தோலிக்கத் தரப்புகளுக்குள் நிகழும் தற்போதைய சூடான விவாதம்.
கே.பி.ஷிபு, பிரதீப் கிருஷ்ணனுக்கு அளித்த பிரத்யேக பேட்டியிலிருந்து…
1. நீங்கள் ஏன் சர்ச்சில் இருந்து வெளியேறினீர்கள்? அதற்கான காரணங்கள் என்ன?
எனக்கு நேர்ந்த தொடர்ந்த தொந்தரவுகளும், கடும் அவமானங்களுமே நான் சர்ச்சை விட்டு வெளியேறக் காரணம். சர்ச் பணத்தைக் கையாளும் விதமும் அதன் செக்ஸ் விஷயங்களும் எனக்குக் கொஞ்சமும் உடன்பாடும் திருப்தியும் அளிக்கவில்லை. இங்கிருக்கும் ஏராளமான பாதிரியார்களும் கன்னியாஸ்திரீகளும் மக்களின் நம்பிக்கையைக் கேலிக்குள்ளாக்குவதுபோல் ஏராளமான பாலியல் அத்துமீறல்களில் ஈடுபடுவதைக் கண்கூடாகக் காண்கிறேன். பாதிரியார்களும், கன்னியாஸ்திரிகளும் குறைந்த அளவே ஊதியம் பெறுவதால், தவறான செய்கைகளுக்கும், பாலியல் தொழிலில் ஈடுபடவும் எளிதில் இரையாகின்றனர்.

2.மதம் மாற்றுவதைப் பற்றி உங்கள் கருத்து?
மதம் மாற்றுவது ஒரு மதத்தை விட இன்னொன்றுதான் உயர்ந்தது என்பதை நிலைநாட்டவே நிகழ்த்தப்படுகிறது. அடி ஆழத்தில் ஒவ்வொரு மதமும் அதனதன் பாதையில் அந்தந்தக் கடவுளரின் செய்தியை மக்களுக்குக் கூறுகின்றன. மதமாற்றம் செய்வதற்கு உண்மையில், சரியான- ஒப்புக்கொள்ளத்தக்க- காரணம் ஏதும் கிடையாது. மதம் மாறிய பின்னர்தான், கடவுளின் பெயரும் வழிபடும் முறையையும் தவிர வேறொன்றும் ஸ்பெஷலாக ஏதுமில்லை என்று உணருகிறார்கள்.

3.கேரளாவில் முரிஞ்ஞூர், போட்டா போன்ற இடங்களில் கூட்டம் கூட்டமாக மக்கள் கலந்து கொள்ளும் டிவைன் ரிட்ரீட் மையங்கள் பற்றி உங்கள் கருத்தென்ன? அங்கு இருப்பவர்கள் பாலியல் கொடுமைகளுக்கும் மன உளைச்சல்களுக்கு ஆளாதலும், ஏன், கொலைகள் கூட நடந்துள்ளதாகவும் குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளனவே?
அது போன்ற ரெட்ரீட் சென்ட்டர்களின் மேலாளர்களாக இருக்கும் பாதிரியார்கள் காம இச்சையைப் பூர்த்தி செய்து காசு பார்ப்பவர்களாக இருக்கின்றனர். பாவம் பற்றிய கோட்பாட்டின் மீது வைக்கப்படும் அதீத முக்கியத்துவம், குற்றவுணர்ச்சியை மக்கள் மனதில் வளர்த்து, பாதிரியார்கள் மற்றும் கன்னியாஸ்திரிகளின் தாளத்திற்கேற்ப இவர்களை ஆட வைக்கிறது.  “பாவத்தின் சம்பளம் மரணம்” என்று பாவத்தைச் சொல்லி சொல்லி பயமுறுத்தியே தன்னை ஒரு கவர்ச்சிகரமான, பூதாகரமான இயக்கமாக மாற்ற முயல்வதில் கத்தோலிக்க சர்ச்சுகள் முன்னோடிகளாக உள்ளன. ஆனால் இது தோற்றுப் போன ஒரு யுத்தி. சுயநலப் பாதிரியார்களோ, பாவமன்னிப்பின் போது பெறப்பட்ட அந்தரங்க உண்மைகளை/செய்திகளை வைத்து, அவர்களையே பிளாக்மெயில் செய்கின்றனர். கடவுளின் அருளைப் பெற வரும் அப்பாவிப் பெண்களை இங்குள்ள பாதிரியார்கள் பாலியல் கொடுமை செய்கின்றனர். இக்குற்றச் செயல்களை உள்ளூர்க்காவல் நிலையத்தின் உதவியுடன் மூடிமறைத்து விடுகின்றனர். எதிர்ப்பவர்களைக் கருணையின்றி “முடித்து” விடுவதும் நடக்கிறது.  இது போன்ற எல்லா சமூக விரோத நடவடிக்கைகளும் சர்ச்சின் அதிகார, அரசியல், சமய செல்வாக்கினால் கமுக்கமாக அமுக்கப்படுகின்றன.

4. ஐரோப்பாவிலும், அமெரிக்காவிலும், சர்ச்சுகளில் பாதிரியார்கள் செய்யும் ஏராளமான பாலியல் கொடுமைகளை (சிறார்கள் மற்றும் பெண்களை பலாத்காரம் செய்வது, ஓரினச்சேர்க்கை) நாம் கேள்விப்படுகிறோம்; ஆனால், இந்தியாவிலோ, இது போன்ற விஷயங்கள் திருச்சபையினரின் அதிகார பலத்தால் மூடி மறைக்கப்படுகின்றன. இது பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
உண்மையில் இந்தியாவில், பாதிரியார்களும், கன்னியாஸ்திரிகளும் இதுபோன்ற பாலியல் தொடர்புகளில் பெருமளவில் ஈடுபடுகின்றனர். நிறைய திருச்சபைக் குழுக்களில் ஓரினச்சேர்க்கை ஒரு சாதாரண விஷயம். அவ்வளவு ஏன், நிறையப் பாதிரியார்களின், கன்னியாஸ்திரிகளின் குழந்தைகள் சர்ச் நடத்தும் அநாதை இல்லங்களிலேயே வளர்ந்து வருகின்றன. மேற்கு நாடுகளில், அங்குள்ள சிவில் சொசைட்டி, இம்மாதிரி முறைகேடுகளை நீதிமன்றங்களுக்கு எடுத்துச்சென்று, பாதிக்கப்பட்டோருக்கு இழப்பீடு பெற்றுத் தருகின்றது. ஆனால், இந்திய சூழ்நிலையோ, பரிதாபகரமானது. இங்குள்ள சிவில் சொசைட்டியும், மனித உரிமை அமைப்புகளும், இது போன்ற முறைகேடுகளை நீதிமன்றத்துக்குக் கொண்டு செல்வதற்குத் தயங்கி, அஞ்சுகின்றன. பாதிக்கப்பட்டவர்களை அச்சுறுத்தி நீதிமன்றங்களுக்குப் போகவிடாமல் செய்து விடுகின்றனர் இந்தப் ”புனிதர்கள்”.

5. கத்தோலிக்கத் திருச்சபையின் கடுமையான சட்ட்திட்டங்களுக்கும், நெறிமுறைகளுக்கும் ஈடுகொடுக்கமுடியவில்லை என்பதாலேயே, உங்களைப் போன்றோரும், சிஸ்டர் ஜெஸ்மி போன்றோரும் அதை விட்டு விலகியதாகக் குற்றம் சாட்டப்படுகிறதே? 
கத்தோலிக்க சர்ச்சின் அமைப்பு முறையே, நான் அதை விட்டு வெளியேறுவதற்குக் காரணம்.எல்லாவிதமான முறைகேடுகளிலும் அவர்கள் ஈடுபடுகின்றனர். கத்தோலிக்கக் குழாமைத் தவிர வேறு எந்தப் பிரிவும் பிரம்மச்சர்யத்தை வலியுறுத்துவதில்லை. சிஸ்டர் ஜெஸ்மியும் நானும் ஊழல்கள் மலிந்துவிட்ட கத்தோலிக்க அமைப்பின் பலிகடாக்களாக ஆக்கப்பட்டோம். கத்தோலிக்க சர்ச்களின் முறைகேடுகளை அம்பலப்படுத்தியதால் அவை எங்களை எதிர்க்கின்றன.

6. கேரளாவில், சர்ச்சுகளுக்கான சட்டத்தைக் கொண்டுவருவதன் அவசியம் பற்றி விவாதங்கள் நடக்கின்றன.பிஷப்களுக்கும், பாதிரிகளுக்கும் சரிபார்ப்புகள் ஏதுமற்ற ஏகபோக அதிகாரங்களை வழங்குவது முறையா?
சர்ச் சட்டம் உடனடியாக இயற்றப்பட வேண்டும். இல்லையென்றால், யாரும் அறியாமல் திருச்சபையினர் கொள்ளைகள் மற்றும் சொத்துச் சுருட்டல்கள் கவனிப்பாரற்று தொடர்ந்து கொண்டேயிருக்கும். சிறுபான்மை நிறுவனங்களாக, நிதிஆதாரம் பெற்று இயங்கி வரும் அனைத்துக் கல்வி நிறுவனங்களையும் அரசாங்கம் கையகப்படுத்தி நடத்த வேண்டும். அப்போதுதான், திருச்சபை இதை ஒரு வணிகமாகச் செய்யமுடியாமல் போகும். சிறுபான்மை, பெரும்பான்மை என்று மக்களைப் பிரிக்கும் கருத்தே ஒன்றுபட்ட இந்தியாவைக் கேள்விக்குள்ளாக்குகிறது. திருச்சபைக் குழுமத்தின் பங்கு ஆன்மிகத்தோடு மட்டும் தொடர்புடையதாக இருக்க வேண்டும். சர்ச்சுகளின் சொத்துக்களை சமூக மக்களே ஏற்று நிர்வகிக்க வேண்டும்; பிஷப்களும், பாதிரியார்களும் அல்ல. சர்ச் சொத்துக்களுக்கு அவர்கள் சொந்தக்காரர்களாக இருக்கக் கூடாது. தற்போது சர்ச்சின் சொத்துகள் வாடிகனில் இருக்கும் தலைமை போப்பினால் உருவாக்கப்பட்ட திருச்சபைக் கட்டளை சட்டப்படி நிர்வகிக்கப்படுகின்றன. இது இந்திய அரசியலமைப்புச் சட்டத்திற்கு எதிரான ஒன்று. இந்தியாவில் இருக்கும் குடிமக்கள் எப்படி இன்னொரு வெளிநாட்டுச் சட்டத்தின்கீழ் உட்படுத்தப்படுவர்?

7.கிறிஸ்தவ அடக்குமுறை இருப்பதாக– குறிப்பாக, வட இந்தியாவில்- நிறைய கிறிஸ்தவ குழுக்கள் குற்றஞ்சாட்டுகின்றனர்.ஜாபாவில் நிகழ்ந்த சம்பவம் ஒரு தனிப்பட்ட குற்றம் என்றும் எந்த ஒரு அமைப்பின் உள்திட்டமில்லையென்பதும் ஆதாரபூர்வமாக நிரூபிக்கப்பட்டுள்ளன.ஆனால், சர்ச் அதிகாரம், இந்து அமைப்புகளின் மீதே தொடர்ந்து பழிசுமத்துகின்றதே. இதைப் பற்றிய உங்கள் கருத்து?
கிறிஸ்தவ மதமாற்றம் ஒரு தனிமனிதனிடம் எந்த ஒரு விளைவையும் ஏற்படுத்துவதில்லை- வழிபடப்படும் கடவுளின் பெயரும், வழிபடும் முறையும் மட்டுமே மாறுகின்றன.வெளிநாடுகளில் இருந்து ஏராளமான பணம் சமய போதனைகளுக்காகவும் மதமாற்றத்திற்காகவும் இங்குள்ள திருச்சபைகளுக்கு வழங்கப்படுகின்றன.

8.வட இந்தியாவில் அங்கொன்றும், இங்கொன்றும் நிகழும் துரதிர்ஷ்ட நிகழ்வுகளைக் கடுமையாகத் தாக்கும் திருச்சபை, கேரளாவில் கன்னியாஸ்திரிகளுக்கு நிகழ்ந்த கொலை மற்றும் அடக்குமுறைகளைப் பற்றி மெளனம் சாதிப்பதேன்?
அவர்கள் கைககள் கறைபடிந்தவை என்பதற்கு இது ஆதாரம். மிஷனரி நடவடிக்கைகள் யாவும் பணம் பண்ணுவதையே மையமாகக் கொண்டு இயங்கி வருகின்றன. இப்போது சர்ச்சில் சேரும் இளைஞர்கள் இயேசுவின் அன்புக்காகவோ, அவர் சொன்ன செய்திக்காகவோ சேர்வதில்லை. பகட்டான வாழ்க்கையில் விருப்பம் உள்ளவர்களே சர்ச்சில் சேருகின்றனர்.

9.மதபோதகர்கள் அரசியலில் ஈடுபட்டு, இந்தச் சமூகத்தைத் தனது அதிகார வரம்பிற்குள் ஆண்டு கொண்டிருக்கிறனர். திருச்சபையினரின் பிடியிலிருந்து சாமானிய மக்களுக்கு விடிவு கிடைக்குமென்று நாம் நம்ப முடியுமா?
மக்களை அதிகாரம் செய்யவும், தன் கட்டுப்பாட்டின்கீழ் கொண்டுவரவுமே கத்தோலிக்க சர்ச் கல்வி நிலையங்களையும் மற்றும் ஏராளமான நிறுவனங்களையும் ஏற்று நடத்துகின்றது. திருச்சபையின் அரசியல் ஈடுபாடுகள் இதை உறுதி செய்கின்றன.சர்ச்களுக்கு சொந்தமான நிறுவனங்களின் மொத்த விலைமதிப்பு நம்மை வாய்பிளக்கச் செய்யும் வண்ணம் அசாதாரணமானது. பெரும்பான்மை கிறிஸ்தவர்களுக்கு, திருச்சபை, பணத்தின் பின்னும் அதிகாரத்தின் பின்னும் செல்வது தெரியும். தெரிந்தாலும், அவர்களால் ஒன்றும் செய்வதற்கில்லை. இந்த சூழ்நிலையை காலம் மாற்றும் என்று நம்புவோமாக.

 

10.இந்தியக் கிறிஸ்தவம் தனது அடையாளத்தை இழந்த்தாக நீங்கள் நினைக்கிறீர்களா? இந்து மதத்தின் மிகத்தொன்மையான- ஆனால் எக்காலத்திற்கும் ஏற்ற நவீன ஆன்மிக மரபை, அதன் தாத்பர்யத்தை கிறிஸ்தவம் உள்வாங்கிக் கொண்டுள்ளதா?
இந்து மதம் என்பது ஒரு வாழ்க்கை முறை என்கிற விஷயத்தில் சர்ச் போட்டியிடவே முடியாது.

11.அங்காடி வளாகங்கள்,மருத்துவமனைகள்,பள்ளிகள்,தொழில் நிறுவனங்களை இயக்கும் ஒரு வணிக ஸ்தாபனமாக வளர்ந்து விட்ட சர்ச்சிடம், ஆன்மிகத்தை எந்த அளவுக்கு எதிர்பார்க்க முடியும்?
சர்ச் ஒரு மிகப் பெரும் வணிக ஸ்தாபனமாக அசுர வளர்ச்சி கண்டுவிட்டது உண்மைதான். திருச்சபையின் நோக்கமெல்லாம் பணம் சம்பாதிப்பதும், இலாபமீட்டுவதும்தான். தர்மஸ்தாபனங்களாகத் தங்களைக் கூறிக்கொள்ளும் இந்த சர்ச்கள், முறையாக வரிக் கணக்குகளை ஆவணப்படுத்திப் பதிவு செய்வதுமில்லை; தங்களது பணியாளர்களுக்கு ஒழுங்கான ஊதியத்தை, சரிவரக் கொடுப்பதுமில்லை. சர்ச்களில் நடைபெறும் முறைகேடுகளைக் களைய அரசு அதன் நிர்வாகத்தை எடுத்து, ஒழுங்கான சட்டதிட்டங்களுக்குட்படுத்தி, நடத்தவேண்டும். எல்லா மக்களையும் கிறிஸ்தவர்களாக, முஸ்லீம்களாக, இந்துக்களாகக் கருதாமல் இந்தியக் குடிமக்களாகவே, அனைவரையும் எந்தவிதப் பாகுபாடின்றி நடத்த வேண்டும்.

12.சர்ச்– குறிப்பாக கத்தோலிக்க சர்ச், அமெரிக்கா, ஐரோப்பாவில் கடும் நெருக்கடியை எதிர்கொள்வதால், அவைகள் ஆன்ம அறுவடைக்கு, மூன்றாம் உலக நாடுகளைக் குறிவைக்கின்றன.மதமாற்றத்தையே தீவிர இலக்காகக் கொண்ட இந்த நடவடிக்கை தொன்மமான, தனக்கென்று ஒரு மரபு கொண்ட இந்தச் சமூகத்தில் பிரிவினையையும் குழப்பத்தையும் ஏற்படுத்தாதா?
ஐரோப்பாவிலும், அமெரிக்காவிலும் சர்ச் வழிமுறைகளைப் பின்பற்றுவோரின் எண்ணிக்கை குறைந்து கொண்டே வருவது சர்ச்சுக்கு ஒரு பெரும் நெருக்கடியை உருவாக்கியுள்ளது. இந்த நாடுகளில் இருக்கும் சர்ச்சுகள் தங்களது ஆன்ம அறுவடைக்கு, கிழக்கத்திய மற்றும் ஆப்பிரிக்க நாடுகளையே நம்பி இருக்கின்றன. மதமாற்றத்திற்குப் பெருமளவில் பணம், பொருள்கள் வாரி வழங்கப்படுகின்றன. இது, சமூகத்தில் குழப்பத்தையே உருவாக்கும். இந்தியப் பழங்குடி மக்கள் தங்களது சடங்குகள், கலாசாரம், மதத்தைக் கைவிடுவதற்கு இலக்காக்கப் பட்டுள்ளனர். இந்துமதம் அவர்களது சுய அடையாளங்களைத் தக்கவைத்துக் கொள்வதற்கு அனுமதித்திருக்கையில், கிறிஸ்தவமோ, அவர்களது அடையாளங்களை வேரோடு பிடுங்கி எறிந்திருக்கிறது. இது பழங்குடிகளுக்கும் கிறிஸ்தவர்களுக்கும் சண்டைகளை உருவாக்குகிறது.

13.கடந்த 100 வருடங்களாக, காலனி ஆதிக்கத்தினரால் பிரமிப்பூட்டும் பணபலம் மற்றும் ஆள்பலத்துடன் கிறிஸ்தவம் இந்தியாவில் பரப்பப்பட்டுக் கொண்டிருக்கிறது. ஆனாலும் எதிர்பார்த்த அளவுக்கு இந்துக்களை ஆன்ம அறுவடை செய்யமுடியவில்லையே. ஏன்?
இந்தியாவில், சிறப்பு வாய்ந்த இந்து தர்மத்திடம் கிறிஸ்தவம் அடைந்தது ஒரு மிகப் பெரும் தோல்வியையே. கிறிஸ்தவம், இந்தியாவில், தனது சொந்த அடையாளத்தை இழந்து நிற்கிறது. சாதிப் பிரிவுகளை அதிகபட்சம் சுரண்டி, தன் ஆதாயத்திற்குப் பயன்படுத்தி, மதம் மாற்ற முயற்சித்த போதிலும், அதில் வெற்றி கிடைக்கவில்லை. இந்து மதத்தில் உள்ள சாதிப்பிரிவுகளைக் களைந்து, எல்லோரும் சமமே என்கிற நிலை வந்தால், இந்து தர்மம் ஒளிவிட்டுப் பிரகாசிக்கும். அப்புறம் ஒருவரும் மதம் மாற மாட்டார்கள்– எவ்வளவுதான் அள்ளிக் கொடுத்தாலும்.


ஷிபு அவர்களின் வலைப்பதிவு

 புத்தகம் & பதிப்பாளர் பற்றிய விவரங்கள்:
“The Heart of a Priest” (Oru Vaidikante Hrudayamitha) 
Green Books India Pvt Ltd
Ayyanthole, Thrissur- 680003
Kerala, India
Ph :0487-2361038, 2364439
info@greenbooksindia.com

நன்றி:தமிழ்ஹிந்து.காம்

பின்னூட்டங்கள்
  1. ஷிபு சொல்கிறார்:

    ஆதி இந்திய கிறிஸ்தவம் பற்றி தெரிந்து கொள்ள:
    http://www.tamilarsamayam.com
    http://www.thamilarsamayam.blogspot.com
    http://www.meykandar.blogspot.com
    http://www.geocities.ws/dravidian_religiion

பின்னூட்டமொன்றை இடுக