பைபிளை மொழிபெயர்த்தவன் ஒரு கிறிஸ்தவ மதத்துரோகி!

Posted: ஜூலை 13, 2010 in இயேசு, கிறித்துவம் - கிறிஸ்துவம், சிலுவை, தோமையார், பரிசுத்த ஆவி

பைபிளை மொழிபெயர்த்தவன் ஒரு கிறிஸ்தவ மதத்துரோகி!

1.”பைபிள் உலகில் அதிக மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்ட நூல்.” என்று பலர் சொல்லக் கேள்விப்பட்டிருப்பீர்கள். கிறிஸ்தவ நம்பிக்கையாளர்கள் என்றால் அதையே “தமது மதம் ஆண்டவரால் தெரிவு செய்யப்பட்டது” என்று நிரூபிக்க உதாரணமாக காட்டுவார்கள். இவர்கள் ஒன்றை மறந்து விட்டு பேசுகிறார்கள். உலக வரலாறு காலனிய காலகட்டம் என்ற ஒன்றைக் கண்டுள்ளது. பிரிட்டிஷ், ஒல்லாந்து, பிரெஞ்சு, ஸ்பானிய, போர்த்துகீச ஐரோப்பியர்கள் உலகம் முழுவதையும் ஒரு காலத்தில் ஆட்சி செய்தார்கள். அவர்கள் அனைவரும் கிறிஸ்தவர்கள். அவர்கள் கைப்பற்றிய புதிய பிரதேசங்களில் கிறிஸ்தவ மதத்தை பரப்பினார்கள். அதற்கு இலகுவாக பைபிளை பல உள்ளூர் மொழிகளில் மொழிபெயர்த்து போதித்தார்கள்.

பைபிள் என்பது ஆங்கில உச்சரிப்பு. பிபிலியோ (Biblio) என்றால் கிரேக்க மொழியில் புத்தகம் என்று அர்த்தம். போர்த்துகீச மொழிப் பெயரான பிபிலியா (Bíblia) என்ற சொல் தான் தமிழில் “விவிலியம்” என்று மாறியது. ஐரோப்பாவில் கிரேக்க, லத்தீன் மொழிகளைத் தவிர்ந்த பிற மொழிகள் பேச்சு வழக்கில் மட்டுமே இருந்தன. பல்வேறு இனங்களை சேர்ந்த மக்களுக்கு தெரிந்த முதலாவது நூலும் பைபிள் தான். தனது பெயரைக் கூட எழுதப், படிக்கத் தெரியாத மக்கள் தான் ஞாயிறு பூசைக்கு தேவாலயங்களுக்கு சமூகமளித்து வந்தார்கள். அவர்களுக்கு ஒரு புத்தகத்தை காட்டி, இது ஆண்டவர் எமக்கு வழங்கியது என்று சொன்னால், கண்ணை மூடிக் கொண்டு நம்புவார்கள்.

லத்தீன் மொழியில் கைகளால் எழுதப்பட்டிருந்த பைபிளை, லத்தீன் மொழி படித்த பாதிரிகள் மட்டுமே வாசிக்க முடிந்தது. பைபிள் எழுதும் அல்லது பிரதி பண்ணும் வேலையில் ஆயிரக்கணக்கான கத்தோலிக்க துறவிகள் ஈடுபட்டிருந்தார்கள். மடாலயத்தில் வசித்த அவர்களின் வேலை அது மட்டும் தான். அது ஒன்றும் இலகுவான காரியமல்ல. நாள் முழுக்க உட்கார்ந்து மையைத் தொட்டுத் தொட்டு எழுதிக் கொண்டிருக்க வேண்டும். இன்று நாம் கிறுக்குவது போல எழுத முடியாது. நுணுக்கமாக படம் வரைவது போன்ற, அழகான கையெழுத்தாக இருக்க வேண்டும். தாளுக்கு பதிலாக பதனிடப்பட்ட மாட்டுத் தோல் பயன்படுத்தப் பட்டது. நெதர்லாந்து மொழியில் Monniken werk (துறவியின் வேலை) என்று ஒரு சொல் வழக்கத்தில் உள்ளது. ஒரே இடத்தில் இருந்து செய்யும் நுணுக்கமான வேலையை அப்படி சொல்வார்கள்.

ஆனால் துறவிகள் எழுதும் பைபிளை வாசிப்பதற்கு பொது மக்களுக்கு அனுமதி இருக்கவில்லை. கத்தோலிக்க மதகுருக்களுக்கு மட்டுமே உள்ள விசேஷ உரிமை அது. அது மட்டுமல்ல, பைபிளை மொழிபெயர்ப்பது தடைசெய்யப்பட்டு இருந்தது. ஐரோப்பாவில் லத்தீன் மேட்டுக்குடியினர் பேசும் மொழியாக இருந்தது. சாதாரண மக்கள் வேறு மொழிகளைப் பேசினார்கள். ஆங்கிலம், பிரெஞ்சு எல்லாம் அந்தக் காலத்தில் “பட்டிக்காட்டான் பேசும் தாழ்ந்த பாஷைகளாக” இருந்தன. சாதாரண குடிமகனும் பைபிளை படித்து புரிந்து கொள்வதை வத்திகான் விரும்பவில்லை. கத்தோலிக்க தலைவர் பாப்பரசர் “மொழிபெயர்ப்புத் தடை” உத்தரவைப் பிறப்பித்திருந்தார். பைபிள் லத்தீன் மொழியிலேயே தொடர்ந்து இருக்க வேண்டும். அதனை வேறு மொழிகளுக்கு மொழிபெயர்ப்பது ஆண்டவருக்கு எதிரான பாவகாரியம் என்று அறிவித்தார். பாப்பரசரின் உத்தரவை மீறி மொழிபெயர்க்க முனைந்தவர்கள் கிறிஸ்தவ மதத் துரோகிகளாக கருதப்பட்டனர். துரோகத்திற்கு தண்டனை மரணம். விவிலிய நூலில் எழுதியிருக்கும், கர்த்தரின் நற்செய்தியை வாசித்தவர்கள் அனைவரும், உயிரோடு கொளுத்தப்பட்டு பரலோகம் சென்றனர்.

2.இன்று லத்தீன் மொழி வழக்கொழிந்து விட்டது. இதனால் லத்தீன் பைபிளை வாசித்து புரிந்து கொள்ளக் கூடியவர்கள் மிகக் குறைவாகவே இருப்பர். வத்திக்கானில் கடமையாற்றும் பாப்பரசர், கார்டினல்கள், மற்றும் உலகெங்கும் கிறிஸ்தவ இறையியல் கற்கும் மாணவர்கள் லத்தீன் மொழி படித்துள்ளனர். விரல் விட்டு எண்ணக் கூடிய இந்த சிறு கூட்டத்தை தவிர வேறு யாருக்கு லத்தீன் மொழி தெரியும்? பைபிளை மொழிபெயர்க்கக் கூடாது என்ற தடைச்சட்டம் இன்று வரை தொடர்ந்திருந்தால், இன்று நிலைமை எப்படி இருந்திருக்கும்? கிறிஸ்தவ மதத்தில் இருந்து தன்னை விடுவித்துக் கொண்ட “நாஸ்திக” ஐரோப்பாவில், இன்று லத்தீன், கிரேக்க மொழிகள் அனைத்து பள்ளிப் பிள்ளைகளுக்கும் போதிக்கப்படுகின்றன. (முன்னாள் சோஷலிச நாடுகளிலும் அந்த பாடத்திட்டம் பின்பற்றப் பட்டது.)பலர் இவற்றை படிப்பதில் அக்கறை காட்டா விட்டாலும், குறைந்த பட்சம் விவிலிய நூலில் எழுதியுள்ள சொற்களின் அர்த்தங்களை புரிந்து கொள்ளவாவது உதவுகின்றது. நானும் தான் கிரேக்க, லத்தீன் மொழிகளைப் படித்திருக்கிறேன்.ஆனால் எனது கிறிஸ்தவம் பற்றிய கட்டுரைகளை எதிர்க்கும் எத்தனை பேருக்கு இந்த மொழிகள் தெரியும்?

மொழிபெயர்க்கும் பொழுது தவிர்க்கவியலாது சில இடங்களில் அர்த்தம் மாறுபடுவதும் நடந்துள்ளது. இன்று ஆங்கிலத்தில் மட்டும் இரண்டு டசின் மொழிபெயர்ப்புகள் (Timeline of Bible Translation History) வந்து விட்டன. (கர்த்தரே! எது சரியானது?) ஒவ்வொன்றும் எங்கோ ஒரு இடத்தில் வித்தியாசப்படும். 19 ம் நூற்றாண்டின் இறுதியில் இரண்டு அன்க்லிகன் திருச்சபையை சேர்ந்த இறையியல் அறிஞர்கள் (Brooke Foss Westcott & Fenton John Anthony Hort) பைபிளை கிரேக்க மொழியில் இருந்து நேரடியாக மொழிபெயர்த்தார்கள். அதுவே இன்று சிறந்த மொழிபெயர்ப்பாக(The New Testament In The Original Greek) கருதப்படுகின்றது. அனேகமாக தமிழ் விவிலிய நூலும் அதை தழுவியே மொழிபெயர்த்திருக்கலாம். இதில் வேடிக்கை என்னவென்றால், உலகில் மிகச் சிறந்த ஆங்கில மொழிபெயர்ப்பை செய்த அறிஞர்கள் மத நம்பிக்கையற்றவர்கள்! டார்வினின் பகுத்தறிவுக் கொள்கையிலும், கம்யூனிசத்திலும் ஈடுபாடு காட்டியவர்கள். பரிபூரணமான பைபிள் மொழிபெயர்ப்புக்காக, கிறிஸ்தவர்கள் இரண்டு நாஸ்திகர்களை நம்பியிருக்க வேண்டியிருந்தது.வெட்கக்கேடு.

பைபிள் ஆண்டவரால் அருளப்பட்ட நூல் என்பதால், எந்த மொழியில் எழுதப்பட்டிருந்தாலும் ஒன்றாகவே இருக்கும் என்று பல கிறிஸ்தவர்கள் அப்பாவித்தனமாக நம்பிக் கொண்டிருக்கிறார்கள். பதினைந்து வருடங்களுக்கு முன்னர், ஒரு புரட்டஸ்தாந்து சபையினர் ஒழுங்கு செய்த பைபிள் வகுப்புகளில் பங்குபற்றும் சந்தர்ப்பம் கிடைத்தது. அந்த இடம், நெதர்லாந்து நாட்டுப்புறக் கிராமம் என்பதால், அருகில் இருந்த அகதி முகாமை சேர்ந்த பன்னாட்டு அகதிகள் கலந்து கொண்டார்கள். அரபு, ரஷ்ய, ஜோர்ஜிய, தமிழ் மொழி பேசுவோர் தம்மோடு அந்தந்த மொழிகளில் இருந்த பைபிளையும் கையோடு எடுத்து வந்திருந்தார்கள். பைபிள் வகுப்பை ஒழுங்கு படுத்தியவர்கள், டச்சு, ஆங்கில மொழிப் பிரதிகளுடன் காத்திருந்தார்கள்.

பைபிளை வாசிக்கும் பொழுது, அது அங்கே பல மொழிகளிலும் புரிந்து கொள்ளப்பட்டது. ஆயினும் டச்சு, ஆங்கில மொழிகள் தொடர்பு கொள்ள பயன்படுத்தப்பட்டன. (நானே ஒரே நேரத்தில் தமிழ், ஆங்கில, டச்சு மொழி பைபிள்களை மாறி, மாறி வாசித்திருக்கிறேன்.) ஒரே அத்தியாயத்தை சேர்ந்த, ஒரே வரிகள் ஒவ்வொரு மொழியிலும் எவ்வாறு மாறுபடுகின்றது என்பதை அப்பொழுது புரிந்து கொள்ள முடிந்தது. வகுப்பை ஒழுங்கு படுத்திய கிறிஸ்தவ சபையை சேர்ந்த நெதர்லாந்துக்காரர்கள் சிறிது குழம்பிப்போனார்கள். “கர்த்தர் எதற்காக தனது சொந்த நூலிலேயே அடிக்கடி முரண்படுகிறார்?” எனப் புரிந்து கொள்ள முடியவில்லை. (பல அப்போஸ்தலர்கள் எழுதிய சுவிசேஷங்களுக்கிடையில் முரண்பாடுகள் காணப்படுவது வேறு விடயம்.)எல்லோருக்கும் பொதுவாகத் தெரிந்த பைபிளைத் தவிர, மோர்மன், ஜெஹோவா பிரிவுகளைச் சேர்ந்தவர்கள் தமக்கென தனியான பைபிளை தயாரித்துள்ளார்கள். மோர்மன்களின் பைபிளில் மோர்மன் என்ற சொல்லும், ஜெஹோவாக்களின் பைபிளில் அடிக்கடி ஜெஹோவா என்ற சொல்லும் இடம்பெறும்.

3.பைபிளின் மூல நூல் லத்தீன் மொழியில் மட்டும் எழுதப்படவில்லை. லத்தீன் பைபிள் கூட ஒரு மொழிபெயர்ப்பு தான். பழைய ஏற்பாடு ஹீபுரு (எபிரேய), அரமைக் மொழிகளில் எழுதப்பட்டது. புதிய ஏற்பாடு முழுக்க முழுக்க கிரேக்க மொழியில் எழுதப்பட்டது. இயேசுவின் பன்னிரு சீடர்களும் ஒன்றில் யூதர்களாக, அல்லது கிரேக்கர்களாக இருந்தனர். இயேசு என்பது அரமைக் பெயர், கிறிஸ்து என்பது கிரேக்கப் பெயர். இயேசுவின் போதனைகளை ஐரோப்பாவுக்கு பரப்பச் சென்றவர்கள் அனைவரும் கிரேக்க மொழி பேசினார்கள். அப்போஸ்தலர்கள் கிரேக்க மொழியில் எழுதிய சுவிசேஷங்களின் தொகுப்பு புதிய ஏற்பாடு என்று அழைக்கப்படுகின்றது. சில வருடங்களுக்கு முன்னர் யூதாஸ் எழுதிய சுவிசேஷம் எகிப்தில் கண்டெடுக்கப்பட்டது. ஆனால் அது பைபிளில் சேர்க்கப்படவில்லை.

இன்று பைபிளில் காணப்படும் சுவிசேஷங்கள் மட்டும் தான் எழுதப்பட்டன, என்று நம்புவது வரலாறு தெரியாதவர்களின் அறியாமை. கிறிஸ்தவ மதம் நிறுவனமயப்பட்ட காலங்களில் எத்தனையோ சுவிசேஷங்கள் அழிக்கப்பட்டு விட்டன.கிரேக்கத்தில் (இன்று துருக்கி இருக்கும் இடம்) ஞானவாத கிறிஸ்தவ பிரிவு (Gnosticism) பரவலான மக்கள் ஆதரவை பெற்றிருந்தது. “இனோசிஸ்” (ஆங்கிலத்தில் : knowledge)என்ற கிரேக்க சொல்லில் இருந்து அவர்களுக்கு அந்தப் பெயர் வந்தது. ஆனால் இன்றுள்ள கிரேக்க பழமைவாத (ஓர்தோடொக்ஸ்) கிறிஸ்தவ பிரிவு அரச ஆதரவைக் கொண்டிருந்தது. இரண்டு மதப் பிரிவினருக்கும் இடையில் அடிக்கடி தத்துவப் போர்கள் நடந்தன. ஞானவாத கிறிஸ்தவர்கள் தோற்கடிக்கப்பட்டனர். சபையை சேர்ந்த உறுப்பினர்கள் கொல்லப்பட்டனர். அவர்கள் எழுதி வைத்த தத்துவங்களும் அழிக்கப்பட்டன. “நன்மைகளின் உலகம், தீமைகளின் உலகம்” என்ற ஈருலகக் கோட்பாடு அவர்களுடையது. ஞானவாத கிறிஸ்தவர்கள் பொருளாயவாத உலகை சாத்தானின் படைப்பாக கருதினார்கள். தேவாலயம் கூட ஒரு பொருள் என்பதால், அதனை அவர்கள் எற்றுக் கொள்ளவில்லை.

ஏற்கனவே பைபிளில் சேர்க்கப்பட்டுள்ள “வெளிப்பாடு” (இறுதி அத்தியாயம்) என்ற சுவிசேஷத்தை என்ன காரணத்திற்காகவோ, கிறிஸ்தவர்கள் படிக்க விரும்புவதில்லை. “கத்தோலிக்க மடாதிபதி பாப்பரசர் சாத்தானின் அவதாரம்.” என்ற அர்த்தம் வரும் சில வரிகள் அதிலே எழுதப்பட்டுள்ளன. (நேரடியாக குறிப்பிடவில்லை.) அதற்காக வத்திகான் அந்த இறுதி அத்தியாயத்தை மக்களின் கண்களில் இருந்து மறைத்து வைக்க விரும்பியதாக கூறப்படுகின்றது. “வெளிப்பாடு” எழுதிய அப்போஸ்தலர் யானிஸ் (“ஜோன்” என்று ஆங்கிலத்தில் சொன்னால் தான் உங்களுக்கு புரியும்) பட்மொஸ் தீவில் அந்த சுவிசேஷத்தை எழுதினார். அவர் அங்கே மறைந்து வாழ்ந்ததாக கருதப்படுகின்றது. துருக்கிக்கு அருகில் உள்ள அந்த சிறு தீவில் இருந்து கொண்டே, பல எதிர்காலக் காட்சிகளை மனக்கண்ணால் கண்டுள்ளார். ஊழிக்காலத்தை எதிர்வு கூறிய ஒரு தீர்க்கதரிசியின் வாசகங்களைப் படிப்பதற்கு பல கிறிஸ்தவர்கள் பயப்படுகிறார்கள்.

4.மேற்கு ஐரோப்பாவில், லத்தீனை தவிர வேறு எந்த மொழியும் எழுத்து வடிவம் கொண்டிருக்கவில்லை. அனேகமாக மொழிபெயர்க்கப்பட்ட பைபிள் அந்த மொழிகளில் எழுதப்பட்ட முதலாவது நூலாக இருக்கும். கத்தோலிக்க அதிகாரத்திற்கு எதிராக, செல்வச் செழிப்பில் வாழ்ந்த ஊழல்மய மதகுருக்களுக்கு எதிராக மார்ட்டின் லூதர் போர்ப் பிரகடனம் செய்தார். ஜெர்மன் மொழியில் எதிர்ப்பு எனப் பொருள்படும் “Protest” என்ற பெயரில் புதிய இயக்கம் பைபிளை ஜெர்மன் மொழியில் மொழிபெயர்த்தது. அதன் பின்னரே, டச்சு, பிரெஞ்சு, ஆங்கில மொழிபெயர்ப்புகள் துணிச்சலுடன் வெளிவந்தன. புரட்டஸ்தாந்து அமைப்பு தோன்றும் வரையில், மொழிபெயர்த்த பைபிளை வைத்திருப்பது பாரதூரமான குற்றமாக கருதப்பட்டது. 1517 ம் ஆண்டு, அதாவது புரட்டஸ்தாந்து கிளர்ச்சி இடம்பெற்ற அதே காலப்பகுதியில், இங்கிலாந்தில் ஏழு பேர் எரித்துக் கொல்லப்பட்டனர். உள்ளூர் கத்தோலிக்க தேவாலயத்தால் மரண தண்டனை வழங்கப்படும் அளவிற்கு அவர்கள் செய்த குற்றம் என்ன? அந்த ஏழு குற்றவாளிகளும் யாரையாவது கொலை செய்தார்களா? இல்லை. தமது பிள்ளைகளுக்கு ஆங்கில மொழியில் ஜெபம் செய்ய சொல்லிக் கொடுத்தது தான் அவர்கள் செய்த மாபெரும் குற்றம்! ஆமாம், அந்தக் காலத்தில் ஜெபம் செய்வது கூட லத்தீன் மொழியில் தான்.

1380 ம் ஆண்டு, இங்கிலாந்தை சேர்ந்த John Wycliffe, என்ற கிறிஸ்தவ இறையியல் பயின்ற அறிஞர் பைபிளை ஆங்கிலத்திற்கு மொழிபெயர்த்தார். பாப்பரசர் எத்தனை தடை போட்டும், மிரட்டியும் அஞ்சாமல் தனது முயற்சியை தொடர்ந்தார். அவரும், அவரது ஆதரவாளர்களும் கையால் எழுதி பூர்த்தி செய்த பைபிளை மேலும் பல பிரதிகள் எடுத்தார்கள். முதன் முதலாக ஆங்கில மொழியில் வெளியான பைபிள் அது தான். John Wycliffe இறந்த பின்னரும் பாப்பரசரின் கோபம் அடங்கவில்லை. “கிறிஸ்தவ மதத்துரோகி” யின் புதைக்கப்பட்ட உடல் தோண்டியெடுக்கப்பட்டு எலும்புகள் பொடிப்பொடி ஆக்கப்பட்டன.

John Wycliffe பைபிளை படித்து மொழிபெயர்த்ததுடன் மட்டும் நிற்கவில்லை. கத்தோலிக்க தேவாலய மதகுருக்களின் ஊழலுக்கு எதிராக மக்களை அணிதிரட்டி போராடினார். உண்மையான கிறிஸ்தவன் ஏழ்மையில் வாழ வேண்டும் என நம்பியவர். ஒரு நேர்மையான கனவானின் பின்னால் மக்கள் அணிதிரண்டதில் வியப்பில்லை. அப்படியானால் அன்றைக்கு கத்தோலிக்க மதகுருக்கள் எப்படி வாழ்ந்திருப்பார்கள் என்று சிந்தித்துப் பாருங்கள். இன்றைக்கு உள்ள அரசியல்வாதிகளை தன்னலம் கருதும் ஊழல் பெருச்சாளிகளாக நீங்கள் பார்க்கிறீர்கள். அதே போலத்தான், அன்றைக்கிருந்த ஐரோப்பிய மக்கள் கத்தோலிக்க மதகுருக்களை பார்த்தார்கள். ஆமாம், கத்தோலிக்க மதவாதிகள் ஆட்சி செய்த ஐரோப்பா, தேவகுமாரனின் பரிசுத்த ராஜ்ஜியமாக இருக்கவில்லை.

5.இன்றைக்கு கத்தோலிக்க மதத்தை சேர்ந்த பிஷப், பாதிரிகள் துறவற வாழ்க்கை வாழ்கின்றனர். கர்த்தரின் திருப்பணிக்கு தம்மை அர்ப்பணித்துக் கொண்டவர்கள் என்று, நீங்கள் அவர்கள் மீது பெரு மதிப்பு வைத்திருக்கிறீர்கள். ஆனால் ஐரோப்பாவில் கத்தோலிக்க மதம் ஸ்தாபிக்கப்பட்ட ஆரம்ப காலங்களில் அவ்வாறான நிலை இருக்கவில்லை. வத்திகானில் முடிசூடா மன்னனாக ஆட்சிக்கட்டிலில் அமர்ந்த முதலாவது பாப்பரசர் பீட்டர் திருமணம் செய்தவர். அது வரலாற்றில் பதியப்படுமளவிற்கு, எல்லோருக்கும் தெரியும். பிஷப்கள் முதல் சாதாரண கிராமப்புற பாதிரி வரையில் திருமணம் செய்து குழந்தைகளை பெற்று குடும்ப வாழ்க்கை வாழ்ந்தார்கள். ஒரு காலத்தில் மதகுருக்கள் திருமணம் செய்யக் கூடாது என்று கத்தோலிக்க திருச்சபை சுற்றறிக்கை அனுப்பியது. அதற்குப் பிறகு ஒன்றும் பெரிதாக மாறிவிடவில்லை. சட்டப்படி ஒரு பெண்ணை திருமணம் செய்வதை விட, பல பெண்களை வைப்பாட்டிகளாக வைத்துக் கொள்வது அவர்களுக்கு இலகுவாக இருந்தது.

சுவிட்சர்லாந்துக்கு அருகில் உள்ள பிரான்சின் நகரமான லியோனில் இருந்து ஆட்சி செய்த கத்தோலிக்க மதகுரு, சினிமாவில் வரும் வில்லன் போல அனைத்து கெட்ட பழக்கங்களையும் கொண்டிருந்தார். அக்கம் பக்கம் இருந்த ஊரெல்லாம் அவரது அட்டகாசம் கொடி கட்டிப் பறந்தது. “லியோன் தாதா” வின் கொடுமை கண்டு பொங்கி எழுந்த வால்டோ (Peter Waldo) என்ற வர்த்தகர், மக்களை திரட்டி சீர்திருத்த இயக்கம் ஒன்றை தொடங்கினார்(1170). தனது சொத்தை எல்லாம் தேவாலயத்திற்கு என எழுதிக் கொடுத்து விட்டு, களத்தில் இறங்கினார். ஆரம்பத்தில் வால்டோவின் சீர்திருத்த இயக்கத்திற்கு பாப்பரசர் அனுமதி வழங்கினார். (மதப் பிரசங்கம் செய்பவர் பாப்பரசரின் அனுமதி பெற்றே செய்ய வேண்டும்.) ஆனால் வால்டோவின் போராட்டம் லியோன் ஊழல் பெருச்சாளிக்கு எதிராக திரும்பியதும் அனுமதியை ரத்து செய்து விட்டார்.

இதற்கிடையே வால்டோ பைபிளை பிரெஞ்சு மொழியில் மொழிபெயர்க்கும் வேலையிலும் ஈடுபட்டார். (அபச்சாரம்! அபச்சாரம்!!) அது மட்டுமல்ல வால்டோ குழுவினரின் தேவாலயங்களில் பெண்களும் மதகுருக்களாக பூசை செய்ய முடிந்தது. (தெய்வ குற்றம்! கர்த்தருக்கே பொறுக்காதே!!) வால்டோ குழுவினருக்கு எதிராக இராணுவ நடவடிக்கை எடுக்க மேற்குறிப்பிட்ட இரண்டு காரணங்களும் போதுமானதாக இருந்தன. பாப்பரசர் அனுப்பிய சிறப்புப் படையணி வால்டோ குழுவினரின் இருப்பிடங்களை முற்றுகையிட்டு வேட்டையாடியது. வால்டோ குழு உறுப்பினர்கள் பலர் கொல்லப்பட்ட போதிலும், மலைகளுக்குள் மறைந்து கொண்டனர். வால்டோ குழுவினர், சுவிட்சர்லாந்தின் வொட் (Vaud) என்ற மாநிலத்தில் நீண்டகாலம் தாக்குப் பிடித்தனர். பிரெஞ்சு மொழியில் வோடுவா (Vaudois) என்ற பெயரே பின்னர், (ஜெர்மன் மொழியில்) வல்டோ குழு என்று திரிபுற்றதாக சொல்லப்படுகின்றது.

கிறிஸ்தவ மதம் தோன்றி ஆயிரம் வருடங்கள் கழிந்த பின்னர் தான் பைபிளை மொழிபெயர்க்கும் முயற்சிகள் நடந்துள்ளன. அதற்கு என்ன காரணம்? அந்தக் காலகட்டத்தில் தான் ஐரோப்பாவில் புதிய நகரங்கள் உருவாகின. நகரமயமான சமுதாயத்தில் புதிய சிந்தனைகளுக்கான தேடல் ஏற்பட்டது. வர்த்தகர்கள் தொழில் நிமித்தம் உலக அறிவு கைவரப் பெற்றிருந்தனர். சிலர் எழுதப் படிக்கக் கற்றுக் கொண்டனர். மறுபக்கத்தில் நிலப்பிரபுத்துவ பொருளாதார முறை தன்னை நிலைப்படுத்திக் கொண்டது. அரசியல் அதிகாரம் (கத்தோலிக்க) மதகுருக்களின் கைகளில் இருந்து, மன்னர்களின் கைகளுக்கு மாறிக் கொண்டிருந்தது. சுருக்கமாக, ஐரோப்பா ஒரு சமூகப் புரட்சியை நோக்கி சென்று கொண்டிருந்தது. தவிர்க்கவியலாது மதம் குறித்த அறிவுத் தேடலும் அந்தப் புரட்சியின் ஒரு அங்கமாகியது. ஆயிரம் வருடங்களுக்கு முன்னர் வாழ்ந்த கிறிஸ்தவர்களை விட, இன்றுள்ள கிறிஸ்தவர்கள் தமது மதத்தைப் பற்றி அதிகம் அறிந்து வைத்துள்ளனர். அதற்கு அவர்கள் தமது உயிரை துச்சமாக மதித்து போராடிய சில சமூக விடுதலைப் போராளிகளுக்கு நன்றி கூறக் கடமைப்பட்டுள்ளனர்.
http://kalaiy.blogspot.com/2010/06/blog-post_26.html

Advertisements
பின்னூட்டங்கள்
  1. Mahesh சொல்கிறார்:

    //பாப்பரசரின் உத்தரவை மீறி மொழிபெயர்க்க முனைந்தவர்கள் கிறிஸ்தவ மதத் துரோகிகளாக கருதப்பட்டனர். துரோகத்திற்கு தண்டனை மரணம். விவிலிய நூலில் எழுதியிருக்கும், கர்த்தரின் நற்செய்தியை வாசித்தவர்கள் அனைவரும், உயிரோடு கொளுத்தப்பட்டு பரலோகம் சென்றனர்.//

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s